About Us
Child Sexual Abuse
Services & Programs
Resources
FAQ
Downloads
Links
Contact Us
  குழந்தை பாலியல் கொடும | கொடுமை இழைப்போர | குழந்தைகளை ஆயத்தப்படுத்தல | அறிகுறிகள்  மற்றும் மாற்றங்கள  

குழந்தை பாலியல் கொடுமையின் அறிகுறிகள்

   குழந்தை பாலியல் கொடுமை உடல்ரீதியான மாற்றங்களைக் காட்டிலும் நடவடிக்கை அல்லது பழக்கவழக்க மாற்றங்கள் வழியாகவே அதிகம் அடையாளம் காணப்படுகிறது. பின்வரும் உடலியல் மாற்றங்களை மருத்துவ சோதனை வழியாக மட்டுமே கண்டறிய முடியும்.

 

·             நடப்பது அல்லது உட்காருவதில் சிரமம்.

·             மன உளைச்சலால் ஏற்படும் உடல் நலக்குறைவு, அனோரெக்சியா, புலிமியா  உணவு உட்கொள்வதை வெறுத்து ஒதுக்குதல்  போன்றவை

·             சிறுநீர் அல்லது மலம் கழிப்பதில் அசௌகரியம்.

·             சிறுநீர் உறுப்பில் மீண்டும் மீண்டும் ஏற்படும் நோய்த் தொற்று.

·             குழந்தை உடல்ரீதியான தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதை வாய், பிறப்பு உறுப்பு அல்லது மலம் கழிக்கும் உறுப்பில் ரத்தப்போக்கு, கசிவு, சிராய்ப்பு அல்லது அரிப்பு போன்றவை மூலம் தெரிந்துகொள்ளலாம்.

·             மார்பகம், பின்புறம், தொடை அல்லது வேறு உறுப்புகளில் சிராய்ப்போ காயமோ காணப்படுதல்.

·             எந்த வயதுக்குழந்தையாக இருப்பினும் பால்வினை நோய்கள் இருத்தல்.

·             காரணமற்ற கருத்தரிப்பு

நடவடிக்கை மாற்றங்கள்  :

நடவடிக்கை மாற்றங்கள் மட்டும் பாலியல் கொடுமையைக் குறிக்காது. இவற்றோடு கூட வேறு அறிகுறிகளும் காணப்படின், உடனடியாக மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்வது அவசியமாகிறது.

·             பாடங்களைக் கற்றுக் கொள்வதில் சிரமம், காரணமில்லாமல் குறைவான மதிப்பெண்களைப் பெறுவது, ஞாபகசக்தியில் குறைபாடு, சிந்தனையை ஒருமுனைப்படுத்துவதில் சிரமம் போன்றவை.

·             விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற உடலுழைப்பு சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபட ஆர்வமின்றி இருத்தல்.

·             விரல் சூப்புவது, உறக்கத்தில் சிறுநீர் கழித்தல், பேச்சுத்திறன் குறைபாடு போன்ற வயதிற்குப் பொருத்தமற்ற சிறுகுழந்தையைப் போன்ற செயல்களைச் செய்தல்.

·             எப்போதும் அடுத்தவரைச் சார்ந்திருக்கும் தன்மை அல்லது மீண்டும் மீண்டும் நம்பிக்கையூட்டப்படவேண்டியிருத்தல்.

·             திடீரென நிறைய பணமும், பரிசுகளும் சேர்வது.

·             உடல்ரீதியான காரணம் ஏதுமின்றி தலைவலி, வயிற்றுவலி அல்லது வாந்தி பற்றி முறையிடுதல்.

·             உடல் சோர்வு அல்லது உறங்குவதில் சிரமம்.

·             தன்னைப் பேணிக்கொள்வதிலும் உடல் நலத்தைக் கவனிப்பதிலும் ஆர்வமின்மை.

·             மனச்சோர்வு.

·             சமூகத்திலிருந்து விலகி இருத்தல் (பெரியோர், நண்பர் என எல்லா உறவுகளிலும் நாட்டக்குறைவு) .

·             திடீரென பயம், இனம் தெரியாத வெறுப்பு, மன உளைச்சல் போன்றவற்றிற்கு ஆளாதல். (கொடுமைக்குட்படுத்தப்பட்ட இடம் குறித்த பயம், குறிப்பிட்ட நபரைக் கண்டால் பயப்படுவது, விளையாட்டு அல்லது நீச்சல் உடை அணிய மறுத்தல் போன்றவை)

·             உணர்ச்சியைத் தூண்டும் ஆபாசமான உடை அணிதல் அல்லது உடலில் ஏற்பட்ட காயங்களை மறைக்க அல்லது அழகில்லாமல் தோன்ற அடுக்கடுக்காக உடையணிதல்.

·             வயதிற்குப் பொருத்தமற்ற பாலுறவு பற்றிய அறிவு, நடவடிக்கை அல்லது பேச்சு.

 

·             பொழுது போக்குச் செயல்பாடுகளாகிய ஓவியப் பயிற்சி விளையாட்டு, பாடுதல் போன்றவற்றில் அர்த்தங்களை மறைமுகமாக  வெளிப்படுத்துதல்.

·             தன்னைவிட வயதில் சிறிய அல்லது வலிமை குறைந்த குழந்தைகளிடம் பாலியல் கொடுமை இழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.

·             வயதிற்குப் பொருத்தமற்ற பாலியல் நடத்தைகள்.

·             சரியான காரணமின்றி வீட்டைவிட்டு ஓடிப்போவது.

·             குடி, போதை மருந்துப் பழக்கம் ஏற்படுவது, உடலுறுப்புகளைச் சிதைத்துக் கொள்ளுதல், சட்டத்தை மீறுதல், தற்கொலை முயற்சி போன்ற தனக்குத் தீமை பயக்கும் செயல்களில் ஈடுபடுதல்.

குழந்தை பாலியல் கொடுமையின் விளைவுகள்.  

துன்பங்களில் இருந்து தன்னைப் பாதுக்காத்துக் கொள்ளும் திறன் குழந்தைக்குக் குழந்தை மாறுபடுகிறது. இந்தத் திறனைப் பொறுத்தே பாலியல் கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளிடம் ஏற்படும் பாதிப்புகளும் மாறுபடுகின்றன. பாதிப்பின் அளவு குழந்தையின் வயது, பாலினம், கொடுமை இழைப்பவர்களுடனான உறவுமுறை, கொடுமை எவ்வளவு அடிக்கடி நிகழ்கிறது என்ற நிலை,  பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் குடும்பம் மற்றும்  சமூகத்தில் கிடைக்கும் ஆதரவு போன்ற பல காரணிகளைச் சார்ந்துள்ளது. எனினும், பாலியல் கொடுமை  மூலம் குழந்தைகளிடம்  ஏற்படும் பாதிப்புகளில் பதிவு செய்யப்பட்ட சிலவற்றை இங்கே அளித்துள்ளோம்.

·             அடுத்தவர் மீதும்  தங்களின் மீதும் அவநம்பிக்கை

·              மிரட்சி மற்றும் மன உளைச்சல்.

·             அவமானம், குற்ற உணர்ச்சி மற்றும் தன்னைத்தானே வெறுத்தல்.

·             தன் உடலையே அன்னியப்படுத்திக் கொள்தல்.

·             சுற்றியுள்ள மனிதர்கள் மற்றும் நடைபெறும் செயல்களிலிருந்து விலகியிருத்தல்; தனித்திருத்தல்.

·             சக்தியில்லாமல் இருத்தல், மனச்சோர்வு மற்றும் அளவுக்கு மீறி பணிந்து போகும் இயல்பு.

·             கோபம்.

·             உடலுறவு பற்றி செயல்களில் அதிக நாட்டம் அல்லது அதை முற்றிலும் வெறுத்தல்.

·             தன் பாலினம் மற்றும் பாலியல் வளர்ச்சி குறித்து கேள்விகேட்டல்.

·             போதை மருந்து மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகுதல்.

·             உண்பதில் ஒழுங்கின்மை  மற்றும் பிரச்சனைகள்

·       எதையும் குறைபாடில்லாமல் மிகச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருத்தல், வேலை மீது அதிக நாட்டம் கொண்டிருத்தல்

·             மனநோய் மற்றும் தற்கொலை முயற்சி.

·             பாலியல் தாக்குதல் அல்லது குற்றங்கள்.